Why Pradosham
சனிமஹா பிரதேஷம் அன்று சிவன் வழிபாடு செய்தால் ஒருவருடம் சிவனை வழிபாடு செய்த பலன்கிடைக்கும் . . .
*சனி மகா பிரதோஷம்*
வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் இறையுணர்வுடன் புனித நீராடி, *‘நமசிவாய’* நாமம் தொழுது, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது சிறப்பு.
அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்தான் பிரதோஷம். அப்போது லிங்கத்தை நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும். பிரதோஷ நேரத்தில் தேவியுடன் சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் கோயிலில் மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும்.
முதல் சுற்றில் வேதபாராயணம், 2ம் சுற்றில் திருமுறை பாராயணம், 3ம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையை உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
*சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் விசேஷமானது.* சாதாரண பிரதோஷ வழிபாட்டைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு.
சித்திரை மாதம் வளர்பிறை திரயோததி திதியில் வரும் பிரதோஷ நாளே மகா பிரதோஷம். சனி பிரதோஷ தினத்தில் ஒரு கைப்பிடி காப்பரிசி(வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும், சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் மூண்டது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் மாண்டனர். கலக்கமடைந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் பிரம்மனைச் சந்தித்து போருக்குத் தீர்வு காணுமாறு கூறினர். நீண்ட சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் சென்றால் கலக்கத்தைத் தீர்த்து வைப்பார் என்று தேவர்களிடம் பிரம்மன் கூறினார்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மகாவிஷ்ணுவை சந்தித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்’ என்று வழி கூறினார் மகாவிஷ்ணு.
‘பாற்கடலை கடைவது முடியாத காரியமாயிற்றே… அதற்கான வழி என்ன’ என்று தேவர்கள் திருப்பிக்கேட்க, ‘மந்தரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி, பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும்’ என்று மகாவிஷ்ணு உபாயம் கூறினார்.
பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்கள் கலக்கம் நீடித்தது.
`கவலைப்படாதீர்கள். உரிய நேரத்தில் உதவுவோம்’ என்று மகா விஷ்ணு கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கியது.
மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தரகிரி மலை சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம(ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மலையை தாங்கிப்பிடித்தார். மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது. தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது.
அதே நேரம் பாற்கடலை கடைந்ததால் கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது. பாம்பின் நீல விஷமும்(காளம்), கடலின் கருப்பு விஷமும்(ஆலம்) சேர்ந்து கடும் வெப்பத்தையும், புயலையும் ஏற்படுத்தியது.
தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். தேவர்கள் அனைவரும் கைலாயம் விரைந்து, சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் கட்டளைப்படி, சுந்தரர் கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார்.
இதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர். விஷத்தை வாங்கிய ஈசன், அதைக் குடிக்க, அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் அடைந்தார். பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார்.
விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. இதனால் அவர் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார். விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்‘ என்று அழைக்கப்பட்டார்.
சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் ஏகாதசி தினம். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது. மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலம் அவர்கள் இறவா நிலையை அடைந்தனர்.
அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர். மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் (சந்தியா நிருத்தம்) புரிந்தார். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.
ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை. எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
*புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்*
*பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்*
*கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்*
*வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்*
*செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்*
*எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.*
*"திருச்சிற்றம்பலம்''*
*அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று*
*சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்*
*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்*
*செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்*
*பல்லோரும் ஏத்தப் பணிந்து.*
*"திருச்சிற்றம்பலம்''*